Sunday, May 15, 2016

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தொழிலாய் அறப்பணியாய் ஏற்று, கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்



எங்கள் விரல்கள் பட்ட
களிமண்களும் சிற்பங்களாய்..
எங்கள் வியர்வைகள் உங்களைப்
பலவாறாக வடிவமைத்திருக்கலாம்
மருத்துவராய்.....
வழக்குரைஞர்களாய்..
பொறியியளார்களாய்...
வணிகர்களாய்..
அமைச்சர்களாய்..
எவ்வாறேனும்!

எங்களை நோக்கி வீசப்படும்
வார்த்தைகளில் காயப்பட்டும்
மறுநிமிடங்களில் மீண்டும் மீண்டும்
ஆசிரியர்களாய் ஜனித்து விடுகிறோம்
நான்கு புறங்களிலும் கல்லெறிபடும்
விநோத படைப்புகள் நாங்கள்!
காயப்படுத்தும் எந்தக் கற்களையும்
எங்கள் வகுப்பறை குழந்தைகளைத் தீண்ட
நாங்கள் வழி கொடுப்பதில்லை
உங்கள் தேர்வின் உயர்வுக்குத்
தேய்ந்து தேய்ந்தும் தேயாமலேயே
வளர்கிறோம்..

எங்கள் உலகத்தில்
நாங்கள்தாம் அனைத்துமாய்..
ஆசிரியர் என்ற எங்கள் உலகத்தில்
நாங்கள் நாள்தோறும்
பல அவதாரங்களில்..
மருத்துவர்களாய்..
வழக்கறிஞர்களாய்..
தோட்டக்காரச் செல்வங்களாய்
ஓட்டுநர்களாய்..
பயிற்றுநர்களாய்..
உலகத் தொழில்களில்
ஏதாவது ஒன்றிலுமாய் இருப்பினும்..

நாங்கள் வாழ்வதோ
இன்னொரு பெற்றோராய்
எங்களுக்கான வகுப்பறைகளில் !!!

*முனியாண்டி ராஜ்.*
 

Wednesday, May 4, 2016

கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதைப் படியுங்கள்

TAMILSJKT

வணக்கம் நண்பர்களே...

இந்த வலைப்பூவை நான் நடத்துவதற்கும் தாய் மொழி நாளிதழில் வழிகாட்டிக் குறிப்பு எழுதி வருவதற்கும் எந்தவொரு ஆதாயமும் எனக்கில்லை. நான் எந்தப் பள்ளிக்கும் அழைத்து, என்னைப் பட்டறைக்கு அழையுங்கள் என்று கூறியதுமில்லை. நான் பட்டறை செல்லும் இடங்களுக்கு இவ்வளவுதான் கட்டணம் என்று கட்டணம் நிர்ணயம் செய்வதும் இல்லை. இங்கே போடப்படும் பதிவுகளைப் புத்தகம் போட்டு நானும் நிறைய காசு பார்க்கலாம். ஆனால், என் எண்ணம் என்ன .... தமிழுக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தன் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கும் சேவை செய்ய வேண்டுமென்பதே. அதற்காக, நிர்வாகத்துறை பதவி உயர்வுகளைக் கூட உதறிவிட்டு, திறமிகு ஆசிரியர் பதவியைத் தேர்ந்தெடுத்தேன். என்னால் இயன்ற வழிகாட்டல்களை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன். ஆனால், கொஞ்ச காலமாக என் பெயர் கொஞ்சம் கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. என்மேல் அதிக 'அக்கறை' கொண்டவர்கள் சொல்லும் அவதூறுகள்..

அ. இந்த வலைமனை வழி நான் கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறேன்.
      (சரி, சம்பாதிக்கும் வழியாவது சொல்லுங்கள்..கற்றுக் கொள்கிளேன்)
ஆ. தாய் மொழி நாளிதழுக்கு எழுதும் ஒவ்வொரு பகுதிக்கும் கட்டணம் 
       விதிக்கிறேன். (தாய்மொழி இதழையே கேட்டுப் பாருங்கள்)
இ. நான் பட்டறை நடத்தும் இடங்களுக்கு அதிக கட்டணம் கேட்டு கறார்
      செய்கிறேன்.
ஈ. பட்டறையில் பல இரகசியங்களை உடைத்தெறிகிறேன்.
     (என்ன ரகசியம் என்று அடியேன் அறியவில்லை)

இதையெல்லாம் கேட்கும்போது வேதனையே மிஞ்சிகிறது. தன்னால் முடியாத நிலைக்குத் தள்ளப்படும் சில கையாலாகதவர்கள் செய்யும் வேலை இதுவென்று எனக்குத் தெரியும். இவற்றைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வெறுப்பாக இருக்கிறது. பழுத்த மரம் தாட் கல்லடி படும் என்பார்கள். அப்படியென்றும் தெரியவில்லை. எனக்கு நெருக்கமானவர்கள், என்னைத் தெரிந்தவர்கள், என்னுடன் இருப்பவர்கள் அல்லது இந்த வலைப்பூவில் உள்ளவற்றைத் 'திருடி' பணம் பார்ப்பவர்கள் செய்யும் வேலை இதுவென்று எனக்குத் தெரியும்.

என்னைப் பட்டறைக்கு அழைக்கும் பள்ளி ஆசிரியர்களிக்கு தெரியும். இக்கட்டான வேளைகளில் கூட அவர்கள் அழைப்புக்கு இணங்கி மாணவர்களுக்கு வழிகாட்டல் வகுப்புகள் நடத்துவது. கட்டணம் பற்றி ஏதாவது அவர்களிடம் வாய் திறப்பேனா என்று கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏன் இந்த கோமாளி புத்தி. உங்களால் முடிந்தால் இதே போன்று ஒரு வலைப்பூ அமைத்துச் செய்யுங்களேன்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது இது தேவையா எனத் தோன்றுகிறது. எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு என் வேலையை மட்டும் பார்க்கலாமா... நானும் பணம் பண்ணும் வேலையைச் செய்யலாமா என்று நிதானமாகச் சிந்திக்கிறேன். ஒரு நாளைக்கு 50 மின்னஞ்சல்கள் பெறுகிறேன். இங்குள்ளவற்றைப் பதிவிறக்கும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் குறுந்தகவல்கள், புலனச் செய்திகள், தொலைவரி செய்திகள் என்று பலர் அழைத்து விளக்கம் கேட்கின்றனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதிலும் அளித்து வந்திருக்கிறேன்.
இவை எனக்குத் தேவையா என்று மேற்சொன்ன அவதூறுகள் என்ன நிறுத்தி வைத்திருக்கின்றன.

நன்றி.

குறிப்பு :
சிறுகதை விளக்கம் எழுதிக் கொண்டிருக்கும் போது, உயர்பதவியில் இருக்கும் நண்பர் ஒருவர் அழைத்து தான் கேள்விப்பட்டவற்றைக் கூறியதால் எழுந்த கோபம் இது. சிறுகதையை முதல் பகுதி என்றும் தொடரும் என்றும் நிறுத்தி வைப்பதற்கு அதுதான் காரணம். எழுதும் 'மூட்' போய்விட்டது.