Tuesday, December 22, 2015

பதிவுகள்

TAMILSJKT

வணக்கம். அண்மைய காலமாக இங்குப் பதியப்படும் சில பதிவுகள் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என ஆசிரியர்கள் பலர் என்னிடம் மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டனர். ஒருசில காரணங்களுக்காக அவை முடக்கப்பட்டு இருக்கின்றன.(வணிக நோக்கத்திற்கு இது சென்று விடாமல், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இலவசமாக இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதில் ஒன்று).
எனினும் இவற்றைப் பார்வையிடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளும் ஆசிரியர்களுக்கு அவற்றைத் தரவிறக்கத்திற்குத் திறந்துவிடப் பட்டதை ஆசிரியர்கள் உணர்வீர்கள். இங்குப் பதியப்படும் சில படைப்புகள் நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்,

1. ஆசிரியை திருமதி லலிதா செங்கனி 
2. ஆசிரியர் திரு.விக்ரம் சயாராமா 
3. ஆசிரியை திருமதி மாரியம்மா மும்மூர்த்தி

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு வேண்டியவை மட்டும் 'உருவிக்கொண்டு' பகிரும் பெரிய மனம் கொண்டவர்களாக இல்லாமல் இருப்பது வேதனை. நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டால் அது தமிழாசிரியர்கள் அனைவருக்கும் பயனாக அமையும்.

*** குறிப்பு
உங்களால் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என்றால், மின்னஞசல் வழியாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

நாம் பொய், நம் சேவையே மெய்

Wednesday, December 16, 2015

TAMILSJKT

அனைவருக்கும் வணக்கம்.
நான் இங்குப் பதியும் ஆண்டு பாடத்திட்டங்கள், செய்யுளும் மொழியணியும் குறிப்புகள், வினாத்தாள்கள் ( அடுத்த பதிவுகளில் இடம் பெறும்) யாவும் என் தனி மனித உழைப்பன்று. இது  ஆசிரியர்கள் பலரின் உழைப்பு. ஆசிரியர்கள் சிலர் எனக்கு நேரடியாக மின்னஞ்சல் செய்து, அனைவருக்கும் பயன்படும்படி வலைப்பூங்காவில் பதிவு செய்யக் கூறுகிறார்கள். சிலவற்றை நான் மற்ற இடங்களில் இருந்து அனுமதியோடு எடுத்துப் பதிவிடுகிறேன். எனவே, சில சமயங்களில் அவற்றில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் காணப்படுவதுண்டு. அவற்றை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். சற்று முன்பு ஓர் ஆசிரியை 'ஆத்திச்சூடியில்' 'ச்' வராது என்று கூறினார். ஆம், வராது. உடனே திருத்தி விட்டேன். இந்த வலைப்பூங்கா அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஆசிரியர்களாகிய நீங்களும் உங்களிடம் உள்ள ஆண்டு பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், பயிற்சிகள் போன்றவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், திருத்தங்களுடன் அவை இந்த வலைப்பூங்காவில் பதிவேற்றப்படும். 
muni2622@gmail.com

இங்கு நான் பதிவிட்டிருக்கும் UPSR பயிற்சிகள் யாவும் என் உழைப்பிலும் சிந்தனையிலும் உருவானவை. அவற்றைப் பற்றியும் தாங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

இனிவரும் காலங்களில் உங்களிடம் இருந்து பல தரவுகளை எதிர்பார்க்கிறேன். அனைவரும் ஒன்றுகூடி வேலை செய்தால் பளு தெரியாது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்த வலைப்பூங்காவின் வழி, ஒன்றிணைய வேண்டும். நன்றி.

Monday, November 30, 2015

TAMILSJKT
வணக்கம். அண்மையில் ஒருவர் கேட்டார். 'நீங்கள் இங்குப் பதியும் மாதிரி வினாக்கள், பயிற்சிகள் போன்றவை அருமையாக இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிலும் உங்கள் வலைமனை பக்கத்தைப் போட்டு விடுகிறீர்கள். அதனால் மாணவர்களுக்குப் படி (photastat) எடுத்துக் கொடுக்க சிரமமாக இருக்கிறது,'' என்று !
என்ன சொல்ல...இங்குப் பதியப்படுபவற்றைப் பலர் பார்வையிட்டுத் தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். நன்று. அதற்காகத்தானே பதிகிறேன். பலர் அதற்காக நன்றிகூட கூறுவதில்லை. பரவாயில்லை. சிலரோ இங்குப் பதியப்படுபவற்றைப் பதிவிறக்கம் செய்து, அடியில் என் பெயரை அழித்துவிட்டு, தயாரிப்பு: தங்கள் பெயர் என்றும் போட்டுக் கொள்கிறார்கள். இதை எங்குப் போய் சொல்ல......
இந்த ஆண்டு (2015) யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டத்தை ஒரு பள்ளி (எனக்குத் தெரிந்து) பதிவிறக்கம் செய்து, அதைச் செய்தது அந்தப் பள்ளியின் தமிழ் மொழி பாடப் பணித்தியக் குழு என்றும், அதன் பதிப்புரிமை தங்களுக்கே என்றும் முகப்பட்டையில் போட்டுக் கொண்டனர். அதை ஓர் அழகான புத்தகமாகவும் செய்து கொண்டனர்.  அதுவும் ஒரு பெற்றோர் மூலமாக என்னடமே வந்தது..பாருங்கள் சார்... அந்தப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு அருமையாக செய்திருக்கிறார்கள்..என்றும் கூறினார்.... இப்போது சொல்லுங்கள்....என் பெயரையும் என் வலைமனை பெயரையும் போடுவது தவறா?'' என்று கேட்டேன். அவர் ஒன்றும் பேசவில்லை. நீங்களாவது பேசுங்களேன்..

Wednesday, November 18, 2015

ஒரு கணம் .................







யு.பி.எஸ்.ஆர்., தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். அதே சமயம். 6 A, 5 A, 4 A மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் நாம் மறக்கலாகாது. இள வயது மாணவர்கள். அவர்களையும் பாராட்டிப் போற்ற வேண்டும். அவர்களின் உண்மையான கல்விப் பயணத் தொடக்கம் இனிமேல்தான் உள்ளது என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். கல்வியின் மேல் அவர்களுக்கு ஒரு வெறுப்பு உண்டாகும் நிலைக்கு நாம் அவர்களைத் தள்ளக் கூடாது. புகைப்படங்கள், பத்திரிக்கைகள் என அவர்களுக்கும் நாம் இடம் தர வேண்டும்,

நிற்க...
யு.பி.எஸ்.ஆர்., தமிழ் மொழித் தாளில் குறிப்பாக தாள் 2 இல் பெரும்பான்மையான மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். நான் பயிற்சிப் பட்டறைக்குச் சென்ற பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பலர் அழைத்து நன்றி தெரிவித்தனர். அவர்களின் பள்ளியில் தமிழ் மொழியின் தேர்ச்சி விகிதம் நல்ல உயர்வு கண்டிருப்பதாகவும் அதிகமான மாணவர்கள் 'A' பெற்றிருப்பதாகவும் கூறினர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

மேலும் பலர், என்னுடைய இந்த அகப்பக்கம் மிகவும் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர். மிக்க மகிழ்ச்சி. 

என் பணி தொடரும். இந்த அகப்பக்கம் வழி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் என்னால் முடிந்த அளவு வழிகாட்டியாய் இருப்பேன். என் பணிமனைகளைத் தொடர்ந்து நடத்துவேன். 

நன்றி.

Monday, October 26, 2015

என்னுடன் சில நொடிகள்.....

TAMILSJKT
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் அறிந்து, அனைத்தும் கொண்ட தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயன்படும் ஒரு வலைமனை இருப்பதாக அறியவில்லை. எனவே, இந்த வலைமனையை மேலும் மெருகுபடுத்த உங்கள் ஆலோசனையும் வழிகாட்டல்களும் தேவைப்படுகின்றன. இந்த வலைமனையில் இன்னும் எவற்றைப் புகுத்தலாம் என நீங்கள்தாம் கூற வேண்டும்.
இப்பக்கத்தை 20,000 மேற்பட்டோர் வலம் வந்திருக்கின்றனர். ஆனால், இதுவரை யாரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்ததாகத் தெரியவில்லை. அதைப்பற்றி நான் வருந்தவுமில்லை. இந்த வலைமனையைப் பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால், அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். தங்களிடமிருந்து ஆரோக்கியமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி.

அன்புடன்,
முனியாண்டி ராஜ்.