Friday, January 8, 2016

நினைவுறுத்தல்

TAMILSJKT


வணக்கம்.

இங்குப் பதியப்படும் இலக்கண, இலக்கியப் பயிற்சிகள் மற்றும் பயிற்றிகளில் இருந்து பயிற்சிகளை எடுத்துத்  தங்கள் பெயரில் புத்தகங்கள் வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர் உழைப்பை உறிஞ்சி வாழ்வது  மிக இழிவான செயல்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இவற்றைப் பயிற்சியாக வழங்கி, அவர்களைத் தமிழ் மொழியில் சிறப்புத் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டுமென்பதே இப்பக்கத்தின் தலையாய நோக்கமாகும்.

சில வருடங்களுக்கு முன் SPM மாணவர்களுக்கு நான் செய்த பயிற்றியல் தொகுப்பு ஒன்றை ‘நண்பர்’ ஒருவர் மிகவும் கெட்டிக்காரத்தனமாக ஒரு புத்தகமாக தன் பெயரில் வெளியீடு செய்தார் என்பதை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். மற்றபடி, தனிப்பட்ட முறையில் யாரையும் சாடுவது என் நோக்கமல்ல. இதனால், தனிப்பட்ட நபர் யாரும் மனவருத்தம் கொண்டால், இருகரம் கூப்பி மன்னிப்புக் கோருகிறேன்.


நன்றி.

Thursday, January 7, 2016

தமிழ் எழுத்துருக்கள்

TAMILSJKT

என் வலைப்பூவை வலம் வரும் அனைவருக்கும் வணக்கம்.
   
என் வலைப்பூவில் பதியப்படும் கோப்புகளைப் படிப்பதற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் தமிழ் எழுத்துரு சிக்கலை எதிர்நோக்குவதாக பலரும் அழைத்தும், குறுந்தகவல் அனுப்பியும், புலனம்(what’s up) வழியும் தெரியப்படுத்தினர். அந்தச் சிக்கல் கூடாது என்பதற்காக இங்கு அஞ்சல் செயலியையும் தமிழா செயலியையும் பதிவேற்றம் செய்துள்ளேன். பயனர்கள் இவற்றைத் தரவிறக்கம் செய்து தங்கள் கணினியில் நிரவி விட்டால் சிக்கல் ஏதும் ஏற்படாது. அப்படியும் சிக்கல் ஏதும் ஏற்பட்டால், புலனம் வழி எனக்குத் தெரியப்படுத்தவும்.

இந்த வலைப்பூ அனைவருக்கும் எந்தச் சிக்கலையும் கொடுக்காது பயனளிக்க வேண்டுமென்பதே என் அவா. இங்கு ஆசிரியர்களைத் தவிர, பெற்றோர்களும் வலம் வருகின்றனர் என்பதை அறிந்த மிக்க மகிழ்ச்சி. ஐயம் ஏதும் ஏற்படின் என் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்க.
நன்றி.

அன்புடன்,

முனியாண்டி ராஜ்.










குறிப்பு : அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துகள்
                 பரணர், இணைமதி

Friday, January 1, 2016

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

TAMILSJKT
அன்புசால் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….

இன்னும் 3 தினங்களில் பள்ளி திறக்கப்பட்டு நம் சக்கர வாழ்க்கை தொடங்கிவிடும். தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு என்று நாமும் கூக்குரலிட்டோம். பெற்றோர்களும் அனுப்பி வைக்கின்றனர்.  சரி, இனி நாம்தான் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். ஆசிரியர்களில் பலர், பள்ளிகளில் தங்களின் வேலைக்கும் அர்ப்பணிக்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று வெறுப்படைந்து இருக்கலாம். நமக்கேற்ற கூலி என்றாவது ஒருநாள் கிடைத்தே தீரும். அதை யாரும் தடுக்க முடியாது. நம் கடமையைச் செய்வோம். நம்மை நம்பி வந்திருக்கும் நம் எதிர்காலச் சிற்பிகளுக்கு நல்லதொரு வழிதடத்தைக் காட்டுவது நம் கடமையாகும். நம் வெறுப்பு, விரக்தி, ஆத்திரம் அனைத்தையும் ஒருபக்கம் வைத்துவிட்டு, நம் கடமையை ஆற்றுவோம். மற்றவர் பிள்ளைகளைத் தம் பிள்ளைகள் போல் கருதி பணியாற்றினால் அதன் பலன் நம் பிள்ளைகளுக்குக் கண்டிப்பாய் சேரும் என்று உறுதியாக நம்புவோம்.

திறமையான, துடிப்பான ஆசிரியர்கள் பலர் பள்ளியில் ஓரங்கட்டப்படுவதையும், ஏமாற்றுபவர்கள், போலியானவர்கள் பெறும் மரியாதையைப் பெறுவதையும் கேட்டிருக்கிறேன். அந்தப் பாவத்தில் நாமும் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

சரி, சொல்ல வந்த விடயத்தை விட்டு விட்டேன். இங்குப் பதிவு செய்யப்படும் RPT, DSKP, MODUL போன்றவற்றை நான் ஒருவனே பார்த்து உறுதி செய்வது கடினமான ஒன்று. நானும் ஆசிரியர்தான். எனக்கும் கடமைகள் உண்டு. எனவே, எந்த RPT, DSKP, MODUL இல்லை என்று எனக்குத் தெரியப்படுத்தினால் அவற்றைப் பதிவேற்ற முயல்கிறேன். ஆசிரியர்கள் சிலர் புலனம் (whats app)) வழியாகவும் குறுந்தகவல் வழியாகவும் எனக்குத் தெரியப்படுத்தும் போது, இயன்றளவில் அவற்றைப் பதிவேற்றி விடுகிறேன். எனவே, ஒத்துழைப்பு கொடுங்கள். உங்கள் வேலைகளையும் தயவு செய்து என் மின்னஞ்சல் வழி அனுப்புங்கள். அனைவரும் ஒன்றுகூடி பணியாற்றுவோம். தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தோளோடு தோளாக நிற்போம். குறுகிய சிந்தனையில் எனக்கு மட்டும் இருந்தால் போதும், நான் செய்த ஒன்றை ஏன் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், அது மிகப் பெரிய தவறு.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி.

அன்புடன்,
முனியாண்டி ராஜ்.


Friday, December 25, 2015

KBAT ........அப்படின்னா....????

TAMILSJKT



KBAT (உயர்நிலை சிந்தனைத் திறன்) என்றால் என்ன ….
சில வாரங்களுக்கு முன் புத்ரா ஜெயாவைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரியுடன்(மலாய்க்கார நண்பர்) மாலை நேர காப்பிக்கு நேரம் இருந்தது. பல விடயங்களைப் பேசிக் கொண்டு வந்த எங்கள் பேச்சு KBAT என்று சொல்லக்கூடிய உயர்நிலை அல்லது மேனிலைச் சிந்தனை பக்கம் திரும்பியது. அப்போது அவர்,

அது அப்படி ஒன்றும் பயப்படக்கூடியது அல்ல….KBAT என்றால் என்ன ?

ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்கு அந்தேரத்தில் தன் சிந்தனை அல்லது அறிவைப் பயன்படுத்தி தீர்வு காணுதலே உயர்நிலை சிந்தனைத் திறன்(KBAT)  என்றார்.
அதற்கு ஒரு கதையும் சொன்னார்.

ஒரு பொறியியல் பட்டதாரி. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். நிறைய வெளிநாடுகளுக்கும் உள்நாடுகளுக்கும் பயிற்சிகள், கருத்தரங்குகள் வழங்குபவர். அன்று ஒரு முக்கியக் கருத்தரங்கு. அவர்தான் சிறப்புப் பேச்சாளர். தன்னுடைய பி.எம்.டபள்யூ. காரை எடுத்துக் கொண்டு காலையிலேயே புறப்பட்டவர் பெட்ரோல் அளவைப் பார்க்கவில்லை.(நிறைய படித்தவரல்லவா…)

சற்று தூரம் சென்றவர்க்கு வாகனத்தின் சமிக்ஞை இன்னும் 10 கிலோ மீட்டர் மட்டுமே செல்ல முடியும் என்று அச்சுறுத்தியது. பெட்ரோல் நிலையம் ஏதும் அருகில் இருக்கிறதா என்று துணைக்கோள வழிகாட்டியில் சோதித்தார். 12 கிலோ மீட்டர் என்று காட்டியது. அப்படின்னா..என்று சிந்திப்பதற்குள் வாகனமும் நின்றது. ஒருகணம் நிலைகுத்திப் போனார். எப்படி…. சிறப்புப் பேச்சாளர் ஆயிற்றே…

அந்நேரம் ஒரு முதியவர் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை இவரும் நிறுத்தினார்.

“சரி, நான் போய் மிதிவண்டியில் வாங்கி வருகிறேன்…பணம் தாருங்கள் ” என்றார். நம்மாளும் ஒரு 50 ரிங்கிட்டை அவரிடம் நீட்ட, ஐயாவும் கிளம்பி விட்டார். பிறகுதான் இவருக்கு சந்தேகம் தலைதூக்கத் தொடங்கியது. அவர் வரலன்னா..ஏமாத்தி ஓடிட்டாருன்னா..என பல்வேறு சிந்தனைகள்…

சற்று நேரத்தில் ஐயாவும் பெட்ரோலை ஒரு பெரிய புட்டியில் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

சரி… இப்போதுதான் நீங்கள் கேட்ட KBAT ஆரம்பிக்கிறது..
எப்படி ஊற்றுவது…அப்படியே கண்டிப்பாய் ஊற்ற முடியாது…சுற்றும் முற்றும் நடந்தார். அவரின் தவிப்பைப் பார்த்த முதியவருக்கு நிலைமை புரிந்தது. அருகில் இருந்த ஒரு கனிமநீர் புட்டியை(mineral water bottle) எடுத்தார். அதை அருகிலிருந்த ஒரு பாறையில் வைத்து அடிபாகத்தை வெட்டினார். புனல் தயாரானது. இனி தீர்வு தானே…..

அந்த தேரத்தில் அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டாரே… அதுதான் உயர்நிலைச் சிந்தனை(KBAT) என்றார்.

என்னதான் பொறியியல் படித்திருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் சிக்கலுக்கு அவரால் ஒரு தீர்வைக் காணமுடியவில்லை. படிக்காத ஒரு முதியவர் தீர்வு கண்டார்.
சரி, நமது விடயத்துக்கு வருவோம்…
வகுப்பறையில் மந்தமான மாணவன் என ஒதுக்கப்படும் ஒரு மாணவனும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். எனவே, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள்…

எ.கா.: வெள்ளப் பேரிடர்

இ ) வெள்ளப் பேரிடர்களை தவிர்ப்பதற்கு நீ என்ன செய்வாய் ?
       என்று கேட்கப்பட்டால் அதற்கு அவர் கூறும் பதில்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..தவறு 
      இருந்தால் கொஞ்சம்   சுட்டிக்காட்டி திருத்துங்கள்…

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு வாசிப்பு. வாசிப்பை மாணவரிடம் வலியுறுத்துங்கள்.. ஏனெனில், அவன் சிந்திக்க முடியும்.. ஆனால், அதை எழுத வேண்டுமல்லவா..



Tuesday, December 22, 2015

TAMILS

பதிவுகள்

TAMILSJKT

வணக்கம். அண்மைய காலமாக இங்குப் பதியப்படும் சில பதிவுகள் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என ஆசிரியர்கள் பலர் என்னிடம் மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டனர். ஒருசில காரணங்களுக்காக அவை முடக்கப்பட்டு இருக்கின்றன.(வணிக நோக்கத்திற்கு இது சென்று விடாமல், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இலவசமாக இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதில் ஒன்று).
எனினும் இவற்றைப் பார்வையிடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளும் ஆசிரியர்களுக்கு அவற்றைத் தரவிறக்கத்திற்குத் திறந்துவிடப் பட்டதை ஆசிரியர்கள் உணர்வீர்கள். இங்குப் பதியப்படும் சில படைப்புகள் நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்,

1. ஆசிரியை திருமதி லலிதா செங்கனி 
2. ஆசிரியர் திரு.விக்ரம் சயாராமா 
3. ஆசிரியை திருமதி மாரியம்மா மும்மூர்த்தி

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு வேண்டியவை மட்டும் 'உருவிக்கொண்டு' பகிரும் பெரிய மனம் கொண்டவர்களாக இல்லாமல் இருப்பது வேதனை. நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டால் அது தமிழாசிரியர்கள் அனைவருக்கும் பயனாக அமையும்.

*** குறிப்பு
உங்களால் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என்றால், மின்னஞசல் வழியாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

நாம் பொய், நம் சேவையே மெய்