Friday, December 25, 2015

KBAT ........அப்படின்னா....????

TAMILSJKT



KBAT (உயர்நிலை சிந்தனைத் திறன்) என்றால் என்ன ….
சில வாரங்களுக்கு முன் புத்ரா ஜெயாவைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரியுடன்(மலாய்க்கார நண்பர்) மாலை நேர காப்பிக்கு நேரம் இருந்தது. பல விடயங்களைப் பேசிக் கொண்டு வந்த எங்கள் பேச்சு KBAT என்று சொல்லக்கூடிய உயர்நிலை அல்லது மேனிலைச் சிந்தனை பக்கம் திரும்பியது. அப்போது அவர்,

அது அப்படி ஒன்றும் பயப்படக்கூடியது அல்ல….KBAT என்றால் என்ன ?

ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்கு அந்தேரத்தில் தன் சிந்தனை அல்லது அறிவைப் பயன்படுத்தி தீர்வு காணுதலே உயர்நிலை சிந்தனைத் திறன்(KBAT)  என்றார்.
அதற்கு ஒரு கதையும் சொன்னார்.

ஒரு பொறியியல் பட்டதாரி. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். நிறைய வெளிநாடுகளுக்கும் உள்நாடுகளுக்கும் பயிற்சிகள், கருத்தரங்குகள் வழங்குபவர். அன்று ஒரு முக்கியக் கருத்தரங்கு. அவர்தான் சிறப்புப் பேச்சாளர். தன்னுடைய பி.எம்.டபள்யூ. காரை எடுத்துக் கொண்டு காலையிலேயே புறப்பட்டவர் பெட்ரோல் அளவைப் பார்க்கவில்லை.(நிறைய படித்தவரல்லவா…)

சற்று தூரம் சென்றவர்க்கு வாகனத்தின் சமிக்ஞை இன்னும் 10 கிலோ மீட்டர் மட்டுமே செல்ல முடியும் என்று அச்சுறுத்தியது. பெட்ரோல் நிலையம் ஏதும் அருகில் இருக்கிறதா என்று துணைக்கோள வழிகாட்டியில் சோதித்தார். 12 கிலோ மீட்டர் என்று காட்டியது. அப்படின்னா..என்று சிந்திப்பதற்குள் வாகனமும் நின்றது. ஒருகணம் நிலைகுத்திப் போனார். எப்படி…. சிறப்புப் பேச்சாளர் ஆயிற்றே…

அந்நேரம் ஒரு முதியவர் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை இவரும் நிறுத்தினார்.

“சரி, நான் போய் மிதிவண்டியில் வாங்கி வருகிறேன்…பணம் தாருங்கள் ” என்றார். நம்மாளும் ஒரு 50 ரிங்கிட்டை அவரிடம் நீட்ட, ஐயாவும் கிளம்பி விட்டார். பிறகுதான் இவருக்கு சந்தேகம் தலைதூக்கத் தொடங்கியது. அவர் வரலன்னா..ஏமாத்தி ஓடிட்டாருன்னா..என பல்வேறு சிந்தனைகள்…

சற்று நேரத்தில் ஐயாவும் பெட்ரோலை ஒரு பெரிய புட்டியில் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

சரி… இப்போதுதான் நீங்கள் கேட்ட KBAT ஆரம்பிக்கிறது..
எப்படி ஊற்றுவது…அப்படியே கண்டிப்பாய் ஊற்ற முடியாது…சுற்றும் முற்றும் நடந்தார். அவரின் தவிப்பைப் பார்த்த முதியவருக்கு நிலைமை புரிந்தது. அருகில் இருந்த ஒரு கனிமநீர் புட்டியை(mineral water bottle) எடுத்தார். அதை அருகிலிருந்த ஒரு பாறையில் வைத்து அடிபாகத்தை வெட்டினார். புனல் தயாரானது. இனி தீர்வு தானே…..

அந்த தேரத்தில் அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டாரே… அதுதான் உயர்நிலைச் சிந்தனை(KBAT) என்றார்.

என்னதான் பொறியியல் படித்திருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் சிக்கலுக்கு அவரால் ஒரு தீர்வைக் காணமுடியவில்லை. படிக்காத ஒரு முதியவர் தீர்வு கண்டார்.
சரி, நமது விடயத்துக்கு வருவோம்…
வகுப்பறையில் மந்தமான மாணவன் என ஒதுக்கப்படும் ஒரு மாணவனும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். எனவே, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள்…

எ.கா.: வெள்ளப் பேரிடர்

இ ) வெள்ளப் பேரிடர்களை தவிர்ப்பதற்கு நீ என்ன செய்வாய் ?
       என்று கேட்கப்பட்டால் அதற்கு அவர் கூறும் பதில்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..தவறு 
      இருந்தால் கொஞ்சம்   சுட்டிக்காட்டி திருத்துங்கள்…

இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு வாசிப்பு. வாசிப்பை மாணவரிடம் வலியுறுத்துங்கள்.. ஏனெனில், அவன் சிந்திக்க முடியும்.. ஆனால், அதை எழுத வேண்டுமல்லவா..



Tuesday, December 22, 2015

TAMILS

பதிவுகள்

TAMILSJKT

வணக்கம். அண்மைய காலமாக இங்குப் பதியப்படும் சில பதிவுகள் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என ஆசிரியர்கள் பலர் என்னிடம் மின்னஞ்சல் மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் தொடர்பு கொண்டனர். ஒருசில காரணங்களுக்காக அவை முடக்கப்பட்டு இருக்கின்றன.(வணிக நோக்கத்திற்கு இது சென்று விடாமல், ஆசிரியர்களும் பெற்றோர்களும் இலவசமாக இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இதில் ஒன்று).
எனினும் இவற்றைப் பார்வையிடுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளும் ஆசிரியர்களுக்கு அவற்றைத் தரவிறக்கத்திற்குத் திறந்துவிடப் பட்டதை ஆசிரியர்கள் உணர்வீர்கள். இங்குப் பதியப்படும் சில படைப்புகள் நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் சிலரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டவை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்,

1. ஆசிரியை திருமதி லலிதா செங்கனி 
2. ஆசிரியர் திரு.விக்ரம் சயாராமா 
3. ஆசிரியை திருமதி மாரியம்மா மும்மூர்த்தி

ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், ஆசிரியர்கள் பலர் தங்களுக்கு வேண்டியவை மட்டும் 'உருவிக்கொண்டு' பகிரும் பெரிய மனம் கொண்டவர்களாக இல்லாமல் இருப்பது வேதனை. நாம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டால் அது தமிழாசிரியர்கள் அனைவருக்கும் பயனாக அமையும்.

*** குறிப்பு
உங்களால் தரவிறக்கம் செய்யப்பட முடியவில்லை என்றால், மின்னஞசல் வழியாக தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

நாம் பொய், நம் சேவையே மெய்

Wednesday, December 16, 2015

TAMILSJKT

அனைவருக்கும் வணக்கம்.
நான் இங்குப் பதியும் ஆண்டு பாடத்திட்டங்கள், செய்யுளும் மொழியணியும் குறிப்புகள், வினாத்தாள்கள் ( அடுத்த பதிவுகளில் இடம் பெறும்) யாவும் என் தனி மனித உழைப்பன்று. இது  ஆசிரியர்கள் பலரின் உழைப்பு. ஆசிரியர்கள் சிலர் எனக்கு நேரடியாக மின்னஞ்சல் செய்து, அனைவருக்கும் பயன்படும்படி வலைப்பூங்காவில் பதிவு செய்யக் கூறுகிறார்கள். சிலவற்றை நான் மற்ற இடங்களில் இருந்து அனுமதியோடு எடுத்துப் பதிவிடுகிறேன். எனவே, சில சமயங்களில் அவற்றில் எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள் காணப்படுவதுண்டு. அவற்றை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். சற்று முன்பு ஓர் ஆசிரியை 'ஆத்திச்சூடியில்' 'ச்' வராது என்று கூறினார். ஆம், வராது. உடனே திருத்தி விட்டேன். இந்த வலைப்பூங்கா அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஆசிரியர்களாகிய நீங்களும் உங்களிடம் உள்ள ஆண்டு பாடத்திட்டங்கள், வினாத்தாள்கள், பயிற்சிகள் போன்றவற்றை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், திருத்தங்களுடன் அவை இந்த வலைப்பூங்காவில் பதிவேற்றப்படும். 
muni2622@gmail.com

இங்கு நான் பதிவிட்டிருக்கும் UPSR பயிற்சிகள் யாவும் என் உழைப்பிலும் சிந்தனையிலும் உருவானவை. அவற்றைப் பற்றியும் தாங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

இனிவரும் காலங்களில் உங்களிடம் இருந்து பல தரவுகளை எதிர்பார்க்கிறேன். அனைவரும் ஒன்றுகூடி வேலை செய்தால் பளு தெரியாது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இந்த வலைப்பூங்காவின் வழி, ஒன்றிணைய வேண்டும். நன்றி.

Monday, November 30, 2015

TAMILSJKT
வணக்கம். அண்மையில் ஒருவர் கேட்டார். 'நீங்கள் இங்குப் பதியும் மாதிரி வினாக்கள், பயிற்சிகள் போன்றவை அருமையாக இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிலும் உங்கள் வலைமனை பக்கத்தைப் போட்டு விடுகிறீர்கள். அதனால் மாணவர்களுக்குப் படி (photastat) எடுத்துக் கொடுக்க சிரமமாக இருக்கிறது,'' என்று !
என்ன சொல்ல...இங்குப் பதியப்படுபவற்றைப் பலர் பார்வையிட்டுத் தரவிறக்கம் செய்து கொள்கிறார்கள். நன்று. அதற்காகத்தானே பதிகிறேன். பலர் அதற்காக நன்றிகூட கூறுவதில்லை. பரவாயில்லை. சிலரோ இங்குப் பதியப்படுபவற்றைப் பதிவிறக்கம் செய்து, அடியில் என் பெயரை அழித்துவிட்டு, தயாரிப்பு: தங்கள் பெயர் என்றும் போட்டுக் கொள்கிறார்கள். இதை எங்குப் போய் சொல்ல......
இந்த ஆண்டு (2015) யு.பி.எஸ்.ஆர்., கண்ணோட்டத்தை ஒரு பள்ளி (எனக்குத் தெரிந்து) பதிவிறக்கம் செய்து, அதைச் செய்தது அந்தப் பள்ளியின் தமிழ் மொழி பாடப் பணித்தியக் குழு என்றும், அதன் பதிப்புரிமை தங்களுக்கே என்றும் முகப்பட்டையில் போட்டுக் கொண்டனர். அதை ஓர் அழகான புத்தகமாகவும் செய்து கொண்டனர்.  அதுவும் ஒரு பெற்றோர் மூலமாக என்னடமே வந்தது..பாருங்கள் சார்... அந்தப் பள்ளி ஆசிரியர்கள் எவ்வளவு அருமையாக செய்திருக்கிறார்கள்..என்றும் கூறினார்.... இப்போது சொல்லுங்கள்....என் பெயரையும் என் வலைமனை பெயரையும் போடுவது தவறா?'' என்று கேட்டேன். அவர் ஒன்றும் பேசவில்லை. நீங்களாவது பேசுங்களேன்..